இது தெரிஞ்சா நீங்களும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம்! - HybridAnalyzer Tamil

Hot

Monday, 18 January 2021

இது தெரிஞ்சா நீங்களும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம்!

 துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?, துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவர்கள் யார்? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.


துப்பாக்கி உரிமம்:

தமிழகத்தில் நடந்துள்ள சில துப்பாக்கி சூடு சம்பவங்களில் முறைப்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களினால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிக்கிறார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.



 அதே நேரத்தில் நிறைய பேர் மனதில் துப்பாக்கியை யார் யார் வாங்க முடியும் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகள் பின்வருமாறு.

எங்கு, எப்படி உரிமம் பெறுவது:

ஒருவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் தேவைபட்டால், அவர் சென்னையை சேர்ந்தவராக இருந்தால் காவல் ஆணையர் அலுவலகம் அல்லது மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக அந்தந்த அலுவலகத்தில் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.



அந்தப் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட நபரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, மனநல தகுதி சான்று மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை இணைக்க வேண்டும். அதனுடன் தேவைக்கு ஏற்ப வங்கியில் பணப் பரிவர்த்தனை விவரங்கள், வருமான வரி தொடர்பான விவரங்கள் போன்றவற்றையும் இணைக்க வேண்டி இருக்கும். ஒருவேளை கொலை மிரட்டல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அதைப்பற்றிய காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ததற்கான  FIR - முதல் தகவல் அறிக்கை நகலையும் இணைக்கலாம்.

எப்போது உரிமம் கிடைக்கும்:

அந்த அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து, விண்ணப்பதாரரை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணைகளின் முடிவில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு துப்பாக்கி தேவையா அவர் துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவரா என்பதை முடிவு செய்வார்கள்.



இதன் ஒரு பகுதியாக துப்பாக்கி உரிமத்திற்கான விண்ணப்பித்தவரின் மேல் ஏதேனும் குற்ற வழக்குகள் இருந்தால் அவரது விண்ணப்பத்தை உடனடியாக நிராகரித்து விடுவார்கள். அதேபோல வேறு ஏதேனும் சந்தேகங்களை முன்னிறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.

இந்த அனைத்து விதிமுறைகளையும் ஒருவர் சரிவர கடைபிடித்து தேர்ச்சி பெறும் போது அவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கப்படும்.

உரிமம் கிடைத்த பிறகு செய்ய வேண்டியவை:

துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் கிடைத்து மூன்று மாதங்களுக்குள் அந்த உரிமத்தின் அடிப்படையில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் வாங்கிவிட வேண்டும். அதனுடன் 10 தோட்டாக்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். அந்த ஒவ்வொரு தோட்டாவிற்கும் அந்த தோட்டாவை வாங்கியவர் தான் பொறுப்பு.

உரிமத்தின் செல்லுபடி காலம்:

 பொதுவாக துப்பாக்கி உரிமத்தின் செல்லுபடி காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். அந்த உரிமம் காலாவதியாகும் நாளிருக்கு முன்பாக அதனை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறினால் அந்த உரிமம் செயல் இழந்ததாகக் கருதப்படும்.

முக்கிய குறிப்புகள்:

 உரிமம் வைத்திருப்பவர் வெளிமாநிலம் செல்லும்போது பயணம் பற்றிய தகவலை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை வெளிநாடு செல்வதாக இருந்தால் தனது துப்பாக்கியை தற்காலிகமாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.



தனக்கு துப்பாக்கி தேவையில்லை என்று நினைக்கும் போது அதனை அரசின் அனுமதியோடு செயல்படக்கூடிய துப்பாக்கி விற்பனை மையங்களில் நிரந்தரமாக ஒப்படைக்கலாம்.

துப்பாக்கியை வாங்குவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தாலோ அல்லது வாங்கிய துப்பாக்கியை வைத்து வனவிலங்குகள் அல்லது வன பகுதிகளில் உள்ள மரங்களை சேதப்படுத்தினாலோ அவர் மீது அதற்கான பிரிவுகளில் குற்ற வழக்குகள் தொடர முடியும்.

No comments:

Post a comment