கவிஞர் கண்ணதாசன் பற்றிய 35 சுவாரசியமான விஷயங்கள்! - HybridAnalyzer Tamil

Hot

Sunday, 18 October 2020

கவிஞர் கண்ணதாசன் பற்றிய 35 சுவாரசியமான விஷயங்கள்!

1.கண்ணதாசனுடைய முதல் மனைவி பெயர் "லீலாவதி" . இவர் ஒரு விலைமகளாவார். திருமணமான சில மாதங்களிலேயே, கண்ணதாசனைப் பிரிந்துபோய் விட்டார். எனினும், இது முறையற்ற திருமணம் என்பதால், கண்ணதாசனின் திருமணக்கணக்கில் பதிவாகவில்லை.2.கண்ணதாசன், எட்டுநாட்களில், ஏறத்தாழ 96 மணி நேரத்தில், குற்றாலத்தில், "இயேசு காவியம்" என்ற காவியத்தையே இயற்றிமுடித்தாா். இது ஒரு அசாத்திய சாதனை நிகழ்வாக இன்றளவும் உள்ளது.

3."அம்பிகை அழகு தரிசனம்" என்ற நூறு பாடல்களடங்கிய நூலையும், கண்ணதாசன் இயற்றியது, சாதனையான நிகழ்வாகும். இந்த நூலை, ஒரே நாளில் இயற்றினாரென்றும், மூன்றுநாட்களில் இயற்றினாரென்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

4.கண்ணதாசன், திருக்குரானுக்கும் உரையெழுத முயன்றார். இஸ்லாமியரின் கடும் எதிர்ப்பு காரணமாக, அம்முயற்சியைக் கைவிட்டார்.

5.கண்ணதாசன் எதிர்பார்த்தது போலவே, அவருடைய ரசனைக்கு, மிகவும் பொருத்தமாக ஒரு காதலி வாய்த்தார். அவர் பெயர் "பானு" என்பதாகும். கண்ணதாசன் இவரை மணந்துகொள்ள நினைத்தபோது, இவர் காலமாகி விட்டாா். அந்த வேதனையிலிருந்தபோதுதான், "வசந்தமாளிகை" படவாய்ப்பு வந்தது. அப்படத்தின் கதை, கிட்டத்தட்ட தன் காதல்கதை போலவே இருப்பதாக அவர் கருதியதால், அப்படத்தின் பாடல்களை, மேற்படியான தன்வாழ்வுச் சம்பவங்களைக் குறிப்பிடும்படியாக, மிக உணர்ச்சிப்பூர்வமானவையாகப் படைத்தார்.

6.கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தமிழ்நடிகை தேவிகா ஆவார். இவருடைய வெளிப்படையான குணம், கண்ணதாசனுக்கு மிகவும் பிடிக்கும்.தான் தயாரிக்கவிருந்த நான்கு படங்களிலும், கண்ணதாசன், தேவிகாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.அப்படங்கள் எடுக்கப்படவில்லை.

7. எம்.ஜி.ஆரை வைத்து, "ஊமையன் கோட்டை" என்ற படத்தைத் தயாரிக்க, கண்ணதாசன் முடிவெடுத்தார். எம்.ஜி.ஆரின் தாமதத்தால், படம் தாமதமாகவே, அம்முயற்சியைக் கைவிட்டு, எம்.ஜி.ஆருக்கு தான் யாரென்பதைக் காட்ட விரும்பி, மார்க்கெட் இழந்து, பெருங்கடனாளியாகிவிட்டிருந்த டி.ஆர். மஹாலிங்கத்தை நாயகனாக்கி "மாலையிட்ட மங்கை" படம் தயாரித்தார். படம் அமோக வெற்றிபெற்றது. தனது விருப்பம்போல பாடல்களை எழுத, கண்ணதாசன் தயாரித்த முதல்படமான இப்படத்தில்தான், மனோரமா அறிமுகமானார். டி.ஆர்.மஹாலிங்கம் புதுவாழ்வு பெற்றார்.

8.கண்ணதாசன் மிக விரைவாக எழுதிய பாடல், "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் இடம்பெற்ற "முத்தான முத்தல்லவோ?" என்ற பாடலாகும்; மிக தாமதமாக எழுதிய பாடல், "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில் இடம்பெற்ற "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடலாகும். தாமதத்திற்கு, இவர் காரணரல்லர். இசைமெட்டு உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம்தான் காரணம்.

9."பெத்தடின்" போதை மருந்துக்கு அடிமையான கண்ணதாசன், எவ்வொரு முறிவு மருந்தின் உதவியுமின்றி, தன் மனஉறுதியாலேயே, ஒருசில நாட்களில், அப்பழக்கத்திலிருந்து மீண்டது அசாத்திய சாதனையாகும். இத்தனைக்கும் இவர் பயன்படுத்திய பெத்தடின் மருந்தின் அளவு மிகவும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

10. தான் அமெரிக்காவிலிருந்து, சிகிச்சை முடிந்து திரும்பியதும் "மனோரமாவிற்கு" பாராட்டுவிழா எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அது நிறைவேறாமலேயே காலமாகிவிட்டார்.

11. "மூன்றாம்பிறை" படத்தோடு, பாடல்களெழுதுவதை நிறுத்திவிட்டு, நூல்களெழுதத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அமெரிக்காவில், சிகிச்சை முடிந்து திரும்பியதும், முழுநேர எழுத்தாளராக மாற நினைத்திருந்தவரை, விதி விடவில்லை.

12. 54 வயதிற்குள், சுமார் 4500 படப் பாடல்கள், சுமார் 4000 கவிதைகள், 6 படங்கள் தயாரிப்பு, எண்ணற்ற நூல்கள், கடன் தொல்லைச் சிக்கல்கள், அரசியல் பேச்சுக்கள், 3 திருமணங்களில் 14 குழந்தைகள், பல படங்களுக்குக் கதை−வசனம்,7 பத்திரிக்கைகளில் ஆசிரியர்−எழுத்தாளர் பொறுப்புக்கள், பல கவியரங்க நிகழ்வுகள், விலைமகளிர் தொடர்புகள் என கண்ணதாசன் வாழ்வியல் சம்பவங்களை நினைத்தால், இவை எப்படி சாத்தியமாயின? என தலையே சுற்றும். அவருக்கோ இவை சர்வசாதாரண நிகழ்வுகளாக இருந்தன.

13. எம்.ஜி.ஆரைக் கடுமையாகச் சாடியவர் கண்ணதாசன். ஆனால், எம்.ஜி.ஆர் இவற்றை மனதில் கொள்ளாமல், அரசவைக்கவிஞராக கண்ணதாசனையே நியமித்தார்.

14.கண்ணதாசனுக்கு, மதுப்பழக்கத்தை, புதுக்கோட்டையில் கற்றுத்தந்தவர், "கம்பதாசன்" என்ற பாடலாசிரியராவார். காதல் தோல்வியால், பெருங்குடியராக மாறினார். இவருடைய வேகமாக பாடல் எழுதும் திறமை, டப்பிங் படங்களுக்கு விரைவாக வசனமெழுதும் திறமை ஆகியன கண்ணதாசனுக்கு உந்துதலாக அமைந்தன.

15.கண்ணதாசனின் சொந்த படமான "கவலையில்லாத மனிதன்" படம், அப்படத்தின் நாயகனான சந்திரபாபுவின் கால்ஷீட் சொதப்பல்களால், காலதாமதமாக வெளியாகி, படுதோல்வியடைந்தது. அக்கடனிலிருந்து மீள கண்ணதாசனுக்கு நீண்டகாலமானது. பிற்காலத்தில் சந்திரபாபு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற சொந்த படத்தை, கடும் வறுமைக்கிடையில் தயாரித்து, இயக்கி, நடித்தபோது, பாடல்களெழுத, கண்ணதாசன் உதவியை நாடினார். கண்ணதாசன், பழைய நிகழ்வை மனதில் கொள்ளாமல், கொடுத்ததை வாங்கிக் கொண்டு, சந்திரபாபுவிற்குப் பாடல்கள் எழுதித் தந்தார்.

16. கண்ணதாசன், பெரும்பாலும் மெட்டுக்களுக்குப் பாட்டெழுதுவதையே விரும்புவார். ஆரம்ப காலங்களில், தன் கைப்பட பாடல்களெழுதியவர், பிற்காலங்களில், தான் சொல்லச்சொல்ல, உதவியாளர்கள் மூலம் எழுதச்செய்தார்.

17. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம், கறாருக்கும், கண்டிப்பிற்கும் பிரபலமானவர். பெரிய நாயகர்களைக் கூட, திட்டியோ, அடித்தோ வேலைவாங்கக்கூடிய ஆளுமை கொண்டவர். ஆனால், கண்ணதாசனிடம் மட்டும், அவர் இறுதிவரை, இரக்கமும், அன்பும் கொண்டிருந்தார். இவரும், சின்னப்பாதேவரும், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர்களாவர்.

18. எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கிய முதல் படமான "நாடோடி மன்னனில்," கண்ணதாசனுக்குப் பாடல்களெழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதன் வசனத்தைச் சிறப்பாக எழுதிப் புகழ்பெற்றார் (வசன உதவியாளர் இரவீந்திரன்).

19. "பொண்ணுக்குத் தங்க மனசு" படத்தில் இடம்பெற்ற, "தேன் சிந்துதே வானம்" பாடல் மெட்டுக்குப் பாட்டெழுத, கண்ணதாசன் எடுத்துக்கொண்டது சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே. இதே பாடலின் தெலுங்கு மெட்டுக்குப் பாட்டெழுத, தெலுங்குப் பாடலாசிரியருக்கு, 3,4 நாட்கள் தேவைப்பட்டன.

20. இல்லறம்−துறவறம் பற்றிய சிறந்த போட்டிப் பாடலான "இது மாலை நேரத்து மயக்கம்" (படம்; தரிசனம்) பாடலை எழுத, கண்ணதாசன் எடுத்துக் கொண்ட நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே.

21.16 வயதிலேயே, சென்னைக்கு ஓடிவந்த கண்ணதாசன், முதலில் நடிகராகவே விரும்பி, "சந்திரசேகரன்" என்ற வேறுபெயரில், வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், எழுத்தாளர் வாய்ப்பே, அவருக்கு முதலில் வாய்த்ததால் எழுத்தாளரானார்.

22. மது பருகினால்தான் இவருக்குப் பாட்டெழுத வருமென்பதெல்லாம் பொய். பெரும்பாலும் பாடலெழுதும்போது மது பருகமாட்டார் என்பதே உண்மை.

23. உணவு, உறக்கம் இரண்டிலுமே கண்ணதாசன் அதிதீவிரப் பிரியராக இருந்தார். நன்கு தூங்கிவிட்டதாலேயே, தொடர்வண்டி பயணத்தைத் தவறவிட்டதும் உண்டு.

24. கண்ணதாசனுக்கு, திருக்குறள் முழுவதற்கும், புதுமையான கண்ணோட்டத்துடன் உரையெழுத பெரிதும் ஆர்வமும், திட்டமுமிருந்தது. ஆனால், காமத்துப்பாலுக்கு மட்டுமே, அவரால் உரைஎழுத முடிந்தது.

25. இவர் பாட்டெழுதும் சூழலே விசித்திரமாக இருக்கும். இவருடைய கடனாளர்கள், அறைவாசலில் நின்றபடி, கடனை வசூலிக்கக் காத்திருக்கும்போது கூட, இவர் அதை சட்டைசெய்யாமல், தீவிரமாக பாடலெழுதுவார். சில சமயங்களில், பாடலுக்கான சூழலை விளக்கும்போது, கண்ணதாசன் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகளைச் செய்தவாறு இருப்பார். பாட்டுச்சூழலை விளக்குபவர், தயங்கி நிறுத்திவிட்டால், அவர் முன்புகூறிய பாட்டுச்சூழல் விபரத்தை, துல்லியமாகக் கூறி, அவரைத் திகைக்க வைப்பார். பாட்டுச்சூழலைக் கூறியவுடன், பெரும்பாலும் 30 நிமிடங்களில், பாடலை எழுதிவிடுவார்.

26. எம்.ஜி.ஆருடைய அரசியலைப் பற்றி, இவரிடம் கருத்துகேட்டபோது, இவரளித்த பதில் " ஏட்டிலே தினத்தந்தி; பாட்டிலே எலந்தப்பழம்; நாட்டிலே எம்.ஜி.ஆர். இதுதான் இன்றைய நிலை" என்றாா்.

27. தி.மு.கவை விட்டு விலகிய போது, "போய் வருகிறேன்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அக்கட்டுரை, தமிழில் தோன்றிய மிகச்சிறந்த அரசியல் கட்டுரைகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

28. திருப்பாவை, திருவெம்பாவை போல, கண்ணதாசன் எழுதிய "தைப்பாவை" கவிதையும் பிரபலமானது. தை மாதச் சிறப்புகளை அதில் வர்ணித்திருப்பார்.

29. தான் வளர்த்த நாய் "சீசர்" இறந்தபோது, அதற்கும் ஒரு இரங்கற்பா இயற்றினாா். வளர்ப்பு நாயின் மறைவிற்கும் இரங்கற்பா இயற்றிய முதல் இந்திய கவிஞர் கண்ணதாசன்தான்.

30. ஒருமுறை, கண்ணதாசன், தான் இறந்துவிட்டதாக, தானே பலருக்கும் தொலைபேசியில் விபரம் தெரிவித்தார். பலரும், பதறியடித்து ஓடிவர, தன்மீதான சமூக மதிப்பைத் தானறிய இவ்வாறு செய்ததாக விளக்கமளித்தார்.

31. காமராஜர் வரலாற்றைப் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார் கண்ணதாசன். ஓரிரு காட்சிகள் எடுக்கப்பட்டதோடு, படம் நின்றுபோனது.

32. கண்ணதாசன் எழுதிய காவியங்களுள், ஒரு கவிதை கூட கிடைக்காமல், முழுமையாக அழிந்துபோன காவியம் "ஈழமகள் கண்ணீர்" என்பதாகும்.

33. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில், ஒரு பாடல் சூழலுக்குப், பல பாடலாசிரியர்கள் மிக சிரமப்பட்டு எழுதியும், எம்.ஜி.ஆருக்கு அவை பிடிக்கவில்லை. இறுதியில், கண்ணதாசனை எழுதவைக்குமாறு, இயக்குநரிடம் கூறினார். அவ்வாறே கண்ணதாசன் ஒரே முறையில் எழுதிய அந்த பாடல், சூழலுக்குப் பொருத்தமாகவும், அனைவருக்கும் பிடித்தமானதாகவும் அமைந்து போனது. அந்த பாடல்தான், "அதோ அந்த பறவை போல" பாடலாகும்.

34. கண்ணதாசனின் பாடல்களுக்கு உந்துசக்தியாக விளங்கியவை, அவருடைய தாயார் விசாலாட்சி அம்மையார் அவர்கள் பாடிய தாலாட்டுக்களும், கம்பராமாயணம் காவியமுமே ஆகும்.

35. "அவன்தான் மனிதன்" படத்தில், இவரெழுதிய "அன்பு நடமாடும்" என்ற பாடலின் வரிகள் யாவுமே, இறுதியில் "மே" என்ற எழுத்திலேயே முடியும் சிறப்புடையது. இப்பாடலையும், இவர், மிக விரைவாக எழுதியதுதான் ஆச்சர்யமானது.

No comments:

Post a comment